கயர்லாஞ்சி பயங்கரம் - உருக்கும் தகவல்கள்
ஒரு தலித் குடும்பம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம் பற்றிய என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சியாக சில தகவல்களைத் தருகிறேன்.
உயர்த்தப்பட்ட சாதி ஆண் மிருகங்களின் வன்முறைக்கும், வன்புணர்வுக்கும் ஆளாகி கொடூரமாக கொல்லப்பட்ட அந்த ஏழைத் தாயின் பெயர் சுரேகா, வயது 44. அவரது மகளின் பெயர் பிரியங்கா, வயது 17. சித்திரவதை செய்யப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்ட மகன்களின் பெயர்கள் ரோஷன் (வயது 19) மற்றும் சுதீர் (வயது 21). குன்பி என்ற அந்த உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 40 கயவர்கள், நால்வரும் தப்பித்து ஓடாமல் இருக்க, அவர்களின் கால் எலும்புகளை முறித்துள்ளனர். கொலை செய்யப்படுவதற்கு முன் சைக்கிள் செயின் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
பய்யாலால் குடும்பத்தினர், மதம் மாறினால் தலித் என்பதால் சந்திக்க நேர்ந்த அவமானத்தையும் அவலத்தையும் பின்னுக்கு தள்ள முடியும் என்ற நம்பிக்கையில் பௌத்த மதத்தைத் தழுவியவர்கள். பிரியங்கா புத்திசாலி மாணவியாகத் திகழ்ந்து, பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர். பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த அவரது அண்ணன் ரோஷன் அக்கிராமத்திலேயே அதிகம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அண்ணனான சுதீர் கண் பார்வையற்றவர். அவரையும் சாதி வெறி பிடித்த பாவிகள் விட்டு வைக்கவில்லை !
பய்யாலால் குடும்பத்தினர் தாக்கப்படக் கூடும் என்ற பயத்தில், அவர்களை கிராமத்தை விட்டு சென்று விடுமாறு எச்சரிக்க, கஜ்பியே (இவரது உறவினரான சித்தார்த், குன்பி சாதியினரால் ஒரு முறை கடுமையாகத் தாக்கப்பட்டபோது, காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு பய்யாலால் குடும்பத்தினர் சாட்சிக் கையொப்பம் இட்டிருந்தனர் !) என்ற குடும்ப நண்பர், சம்பவ தினத்தன்று கயர்லாஞ்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா தனது கைத்தொலைபேசியில் அவரை உதவிக்கு அழைத்துள்ளது தெரிய வந்தைருக்கிறது. அவர் வருவதற்குள் எல்லாமே முடிந்து விட்டது !
சம்பவ தினத்தன்று (29 செப்டம்பர் 2006) மாலையில், மின்சாரம் இல்லாத அவர்களது சிறுகுடிசையில், பிள்ளைகள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். தாயார் சுரேகா உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, குன்பி அரக்கர்கள் அடங்கிய வெறிக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று இந்த படுபாதக செயல் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தவன் பிரபாகர் மண்டேலிகர் என்பவன். அவனோடு செர்ந்து, தற்சமயம் கைது செய்யப்பட்டிருக்கும் 42 பேரும், தாங்கள் சம்பவம் நடந்த போது கிராமத்திலேயே இல்லை என்று சாதிக்கின்றனர். ஊரில் உள்ள மற்ற இரு தலித் குடும்பத்தினரும் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல மரண பயத்தில் மறுத்து வருகின்றனர் என்பது வேதனையான விஷயம். அரசு இயந்திரமும், காவல் துறையும், போஸ்ட்மார்ட்டம் செய்த அரசு டாக்டர்களும் குற்றவாளிகளுக்கு சாதகமாக இயங்கும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ???
தற்போது பய்யாலால் மட்டுமே நடந்த அராஜகத்திற்கு சாட்சியாக உள்ளார். ஆனால், அவர் முதல் குற்றவாளி என்று கை காட்டிய கிராமத்துத் தலைவரான உபஸ்ராவ் கன்டாடே இதுவரை கைது செய்யப்படாதது போலீசார் யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆள் அரவமிக்க பொது இடத்தில் நடந்ததை கிராமத்தில் உள்ள ஒருவரும் பார்க்கவில்லை என்று சாதிப்பது விந்தையிலும் விந்தை ! முதல் மருத்துவ அறிக்கை கொலை செய்யப்பட்ட நால்வரும் கபாலத்தினுள் ஏற்பட்ட ரத்தப் பெருக்கினாலும் (intracranial haemorrhage), நரம்பு மண்டல அதிர்ச்சியாலும் (neurogenic shock) இறந்தனர் என்று கூறுகிறது. வன்புணர்வு பற்றி அறிக்கை எதுவும் பேசவில்லை ! போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் தற்சமயம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர கிராமங்களிலும், அவ்வரசின் கிராம நிர்வாகத்திலும் புரையோடிப் போயிருக்கும் சாதீய உணர்வே, விசாரணையின் மெத்தனத்திற்கும், போக்கிற்கும் காரணம் என்பது நிதர்சனம் ! முதல் தகவல் அறிக்கை (FIR) சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குப் பின் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது ! அரசு உயர்மட்டத்திலிருந்து வரும் பிரஷர், பய்யாலாலுக்கு உரிய நீதி வழங்கப்படுவதை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது ! ஓய்வு பெற்ற நீதிபதி கோல்ஸே பாட்டில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு, தன் முழு அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. தற்போது, வழக்கு விசாரணை CBI வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்பதிவின் முடிவில் உள்ள "தொடர்புடைய சுட்டி"யை கிளிக் செய்து, கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் மீது ஏவி விடப்பட்ட வன்முறை பற்றிய சில படங்களை பார்க்கலாம். இளகிய மனமுடையவர்கள் தயவு செய்து பார்ப்பதை தவிர்த்து விடுங்கள் !
எ.அ.பாலா
### 264 ###